சனி, 6 ஜூலை, 2013

விஜயிடம் இருந்து கற்றுக்கொண்டேன்...

         ரோஜாக்கூட்டம் படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் நாயகனாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர் ஸ்ரீராம்  என்கிற ஸ்ரீகாந்த் தினக்குரல் பத்திரிகையின் சகோதர வெளியிடான உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்:எஸ்.ரோஷன்

ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நண்பன், பாகன் என பிஸியாகி அதே ஹிட் இடத்திற்கு வந்திருக்கிறார்.
தமிழில் மட்டுல்ல தெலுங்கு, மலையாளத்திலும்  இப்போது பிஸியான நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த் இந்த வாரம் பேஸ்புக் பகுதியில் உங்களோடு...!

வணக்கம் நான் உங்கள் நண்பன் ஸ்ரீகாந்த்! சென்னையில படிக்கும் போதே  எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் முதலில் அறிமுகமானது சின்னத்திரையில்தான். பாலச்சந்திரன் சேரின் மரபுக்கவிதைகள் என்ற  தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் நான் மொடலிங் செய்து வந்தேன். என் படத்தை பார்த்து விட்டு  ரோஜாக்கூட்டம் திரைப்படத்திற்கு அழைப்பு வந்தது. ஆனா அந்த கேரக்டருக்கு ஏற்ற வயது எனக்கு இருக்கவில்லை. பின்னர் 2 வருடத்திற்கு பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில்  நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானேன்.

*ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்தீபன் கனவு என்று ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைத் தந்து அசத்தி வந்த நீங்கள் சிறிதுகாலம் அவ்வளவு ஜொலிக்கவில்லையே?
எல்லோருடைய வாழக்கையிலும் வெற்றி தோல்வி  என்று இருக்கும் இல்லையா...? நான் வெற்றிகளையும்  பார்த்து இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு பிறகு தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். தவறுகளை திருத்திக் கொண்டால் வாழ்க்கையில முன்னேற வழி கிடைக்கும். நான் தோல்விகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.  இப்போது நண்பன், துரோகி, பாகன் போன்ற வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கிறேன்.

* நண்பன் படத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
 ஜீவா நான் சினிமாவுக்கு வந்த போது வந்த நடிகர்! ஆனால் விஜய் என்னைவிட மூத்தவர். என்னுடைய நெருங்கிய நண்பர்.
எல்லோரிடமும் ரொம்ப யதார்த்தமாக பழகக்கூடிய ஒருவர்.  ரொம்ப அனுபவசாலி. அவருடைய வார்த்தைகளும்  ரொம்ப கவனமாக இருக்கும். நண்பன் படம் மூலமாக நான் விஜயிடம் நிறைய  கற்றுக்கொண்டேன்.


* கல்லூரி மாணவனாக அதிகமான படங்களில் நடித்துள்ளீர்கள் அது பற்றி?
 இடையில் எனது வயதுக்கு மீறிய கதைகளிலும் நடித்திருந்தேன். நான் இந்த வயசில ஒரு கல்லூரி  மாணவனா நடிக்கலனா பிறகு நடிக்க முடியாது.  அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த வேண்டுமென்று கல்லூரி மாணவன் கதைகள் வந்ததால் நடித்தேன்.

 *கதைகள் தெரிவு செய்யும் போது எவ்வாறான   விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்?
நான் ஏற்கனவே நடித்த படங்களின் கதைகள் போல் இருந்தால் தெரிவு செய்ய மாட்டேன். எனது கதாபாத்திரத்தில் என்ன புதுமை இருக்கு என்று பார்ப்பேன். இயக்குநர்  அந்தக் கதை மூலம் நம்மள வெளிப்படுத்துவாரா என்று தெரிந்து  கொள்வேன்.

* இலங்கைக்கு பல தடவைகள் வந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?
 பார்த்திபன் கனவு, வர்ணஜாலம் ஆகிய திரைப்படங்களை முழுமையாக இலங்கையில் தான் பண்ணினோம். பிறகு ஜூட் படத்தின் பாடல் காட்சிக்காகவும் இலங்கை வந்து இருக்கிறேன்.
றம்பொடை, நுவரெலியா, கண்டி, பெந்தோட்ட, கொழும்பு போன்ற இடங்களுக்கு திரைப்பட சூட்டிங்காக வந்து இருக்கிறேன். இதன்போது இலங்கை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கூட கிடைத்தது.

எங்களுக்கு தெரிந்த விடயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
இலங்கை மக்கள் ரொம்பவும் அன்பும், பாசத்துடனும் பழகுபவர்கள்.
நாங்கள் தமிழ்  நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவர்களுடைய விருந்தாளிகள் போல் கவனித்துக் கொண்டார்கள்.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?
விருதுகளை எண்ண முடியாது. அண்மையில் கூட மலேசியாவில்  பாலச்சந்திரன் சேர் கையால சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

* சொந்தக் குரலில் பாட வேண்டும் என்ற ஆசை உண்டா?
 சந்தர்ப்பம்  கிடைத்தால் பாடுவேன். ஆனா கொஞ்சம் பயம் இருக்குங்க. ஏன்னா  நம்ம குரலை கேட்டு மற்றவங்க என்ன ஆவங்க என்று!

*அரசியலுக்கு வரும் ஐடியா?
சத்தியமாக கிடையாது. அரசியல் எனக்கு ஏணி வச்சாகூட எட்டாதுங்க.  நான் ஒரு நடிகனாக (கலைஞனாக) மட்டும் தான் இருக்க ஆசைப்படுகிறேன்.

* இயக்குநர் ஆகும் ஆசை?
நான் நடிப்புல மட்டும் தான் கவனம் செலுத்தனும் என்று நினைக்கிறேன். நடிப்பு கடல் மாதிரி. நான் இன்னும் நிறைய  தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.  நான் என் திறமையை இன்னம் வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

 * உங்களுடன் இணைந்து நடித்த நடிகைகள் பற்றி?
நான் அதிகமா  சினேகா, மீராஜாஸ்மின், சோனியா அகர்வால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கேன். சினேகா புன்னகை அரசி.  நன்றாக தமிழ் பேசுவாங்க. தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவங்க. இவங்க கூட நடித்ததில்  எனக்கு பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கு.
அடுத்தது  மீரா ஜாஸ்மின்,  நடிப்பு என்பது அவங்களுக்குள் ஊறியிருக்கும் ஒரு விடயம். ஒரு சிறந்த நடிகையுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
அப்புறமா சோனியா அகர்வால்.  இவங்களுக்கு தமிழ் பேச வராது என்றாலும் ரொம்ப அன்பாக பழகுவாங்க. இவங்க 3 பேர் கிட்ட  இருந்தும் பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

*நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் ?
 வேற யாருங்க!  நம்ம உலக நாயகன் கமல்தான்.  கமல்  பெரிய அறிவாளி. சினிமாவைப் பற்றி எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து கொண்டே இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
நண்பன் படக்காட்சியில் நிஜமாகவே அழுதேன்...
* நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த காட்சி?
‘நண்பன்’ படத்தில் ஒரு காட்சி. நான் படிக்காம கமரா மேனாக போகனும்னு அப்பாவிடம் சொல்ல  அவர் வேண்டாம்னு சொல்வாரு. அந்த சமயத்தில என் ஆசை நிறைவேறாத ஏக்கத்தில அழுவேன். அந்தக்  காட்சியில் உண்மையாகவே அழுதுட்டேன். இந்தக் காட்சி என் வாழ்க்கையில் நடந்த காட்சியாகத் தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அப்பாகிட்ட படிப்ப விட்டுட்டு சினிமாவுக்கு  போவதற்கு அனுமதி கேட்டேன். அப்பா சம்மதிக்கலை.  அப்போது நண்பன் படக்காட்சி போன்றே அழுதேன்.

*அண்மையில் தீபாவளி கொண்டாடிய அனுபவம்?
எனது  ஆண் குழந்தைக்கு மூன்றரை வயது, பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது.  இவங்களுடன் சேர்ந்து சொந்தக்காரர் வீடுகளுக்குச் சென்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாடணும் என்று ஆசைப்பட்டோம்.  அதேமாதிரி கொண்டாடினோம். எனது வீட்டுக்கு சில தொலைக்காட்சிகள் வந்து என்னுடன் சேர்ந்து தீபாவளி நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.  நிறைய விடயங்களை இந்தத் தீபாவளிமூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

 *உங்களுடைய குழந்தைகளை  நடிக்க அனுமதிப்பீர்களா?
எனது குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தா அவங்க வருவாங்க. நான் அவங்க நல்லா படிக்கணும்னு தான் ஆசைப்படுகின்றேன். அவங்க படித்து முடித்தவுடன் பார்க்கலாம்.

*இலங்கை  ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல படங்களை பாருங்கள். திருட்டு சீடி மூலமாகவோ ஒன்லைன் மூலமாகவோ படங்களை பார்க்க வேண்டாம். இது எல்லோரும் சொல்லும் விடயம்தான். ஒரு படம் நல்லா இருக்குதா? இல்லையா? என்றதை நீங்களே பார்த்து நீங்களே முடிவெடுங்கள். அடுத்தவங்கக்கிட்ட தெரிந்து கொண்டு இந்தப் படம் நல்லாருக்கா படம் ஓடுமா என்று தெரிந்து கொண்டு போறதை விட அந்த முடிவு அவங்களுடையதாக இருக்கணும். ஏன்னா ஒரு படத்துக்கு பின்னாடி பலருடைய வாழ்க்கையும் இருக்கு. சில குடும்பங்களும் அதை நம்பியிருக்கு.
அழகான இந்தத் திரையுலகம் இன்னும் வாழ வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும். உங்களை மகிழ்ச்சிப்படுத்த நாங்க இருக்கோம்.

இசை பயிற்சி அல்ல உணர்ச்சி!

நம்நாட்டு கலைஞர் ஷமீல் உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்: எஸ்.ரோஷன்

எல்லா புகழும் இறைவனுக்கே...! உலகின் ஆதாரமான இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். ஹா உதயசூரியன் நண்பர்களே...
நான் ஷமீல். இலங்கையில் இசைத்துறைக்கு நான் அறிமுகமாகி இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
நான் ""கனவின் கருவில்...'' என்னும் பாடலின் மூலம் இசையமைப்பாளனாக, பாடலாசிரியராக, பாடகராக அறிமுகமானேன்.
இசை எனக்கு அறிமுகமானது பெற்றோர் மூலமாகவே. அதனால், எனக்கு இசை மீதான ஆர்வம் என்பது அதிசயத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால்  புதிதாக பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஒரு புதிய முயற்சி.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் நான் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.
முதன் முதலாக  பேட்டியெடுத்து என்னை உற்சாகப்படுத்தியது காண்டீபன் அண்ணாதான். சக்தி வானொலி  மற்றும் அபர்ணா அண்ணா, காண்டீபன் அண்ணா, கஜமுகன் அண்ணா, டயானா, கணாதீபன் அண்ணா, பிரஜீவ் எல்லோருக்கும் இந்த இடத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு எனக்கு முகவரி தந்தது சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சிதான். சியா அண்ணா, சமந்த ராஜ் ஆகியோர் எனக்கு களமமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.  
பிறகு சூரியனில் எப்.எம். இல் கிடைத்த வேலை இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது எத்தனையோ பேருக்கு வேலையின் மகத்துவம் புரிவதில்லை. எனக்குக் கிடைத்த இந்த வேலையை ஒரு கொடையாகவே கருதுகிறேன். முக்கியமாக சூரியன் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாதான் நான் இசைத்துறையில் பிரகாசிக்கக் முக்கிய காரணம். எனக்கு ஒரு வழிகாட்டியாக செயற்பட்டவரும் அவரே. இந்த காலகட்டத்தில் தான் நிறைய பாடல்களை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
""எத கேட்டாலும் சூரியன் போல இருக்குமா...'' பாடலில் தொடங்கி இப்போது ஒலிக்கும் ""வான் முழுதும்...'' பாடல் வரை அநேகமான நிலைய குறியிசைகள் செதுள்ளேன். அதில் 2009 ஆம் ஆண்டு ""எத்தனை நாளா...''  என்ற நிலைய குறியிசைக்கு  சிறந்த நிலைய குறியிசைக்கான விருது கிடைத்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நிலைய குறியிசைகளில் 90 வீத வரிகள் நானே எழுதியதுதான்.
 அத்துடன் முக்கியமாக சூரியன் ஆலோசகர் நடராஜசிவம் அவர்களை நினைவுபடுத்தியாக வேண்டும். வானொலி சம்பந்தமான விடயங்களின் ஊற்று என்றும் அவரை சொல்லலாம். அதில் நானும் கொஞ்சம் பருகிக்கொண்டேன்.
அலுவலக கலைஞர்கள் தவிர்ந்து, எனது பாடல்களுக்காக இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மலேசியா போன்ற நாட்டுக் கலைஞர்கள் பலருடன் பணி புரிந்துள்ளேன். எனது வாழ்வில் ""கனவின் கருவில்...'' பாடலுக்கு அடுத்தபடியாக பெரிய திருப்பம் தந்தது மழைவிழியின்... பாடல்.
இதன்மூலம் கிடைத்த ஒரு மிகப்பரிய கவிஞர் நண்பன் சதீஷ்காந்த். எனது பாடல்களுக்கு நானே வரி எழுதுவதிலிருந்து சற்று ஒதுங்கக் காரணமாக அமைந்தவர். அவரது அறிமுகத்தின் பின் அவரது பாடல் வரிகள்தான் இப்போது எனது இசையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளர் நிக்கி  எனது இசையைத் தாண்டிய தொழிநுட்ப அறிவு வளரக் காரணமாக இருந்தவர்.
அமெரிக்க கலைஞர்களுக்காக இசையமைக்கும் போது தான் நிறைய ஒலி பொறியியலாளர்களின் நட்பு கிடைத்தது. எனது பாடல்களில், அன்றிலிருந்து இன்று வரை சண்டைபோடும் சிறந்த ஒளி நயம், அதில் என்றுமே நான் பின் வாங்கியதில்லை. இன்று வரை ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு வகையாகத்தான் அமைகின்றன. அதன் சிறந்த இசைக் கலவைக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இன்னும் எனக்கு திருப்தி ஏற்படாத விடயம் இசை மட்டும் தான்.
எனது வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். மனைவியின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். ஏனென்றால் இசைப்பயண ஆரம்பம் தொடக்கம் இன்று வரை எனக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்கக் கிடைக்கும். அப்படி இருக்க குடும்ப வேலைகளை முழுதுமாக தன் பொறுப்பில் எடுத்து செது வருகிறார். என்னை எந்த கஷ்டமும் படுத்தாது எனது பாடலின் முதல் விமர்சகராகவும் எனது மனைவி நௌசியா இருக்கிறார். மகள் சஷா, மகன் ஹசன். இவர்கள்தான் எனது  உலகம்.
இப்போது எனது இசைப் பயணம் கடல் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பெயர் குறிப்பிட முடியாத தென்னிந்திய திரைப்படத்தில் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இசை குரு ரஹ்மானுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவரினூடாக எனக்கு இப்படி ஒரு வாப்பு கிடைத்தது இறைவன் சித்தம். இந்தப் படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அது பற்றியும் விரைவில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
புதிதாக இசைத்துறையில் சாதிக்கும் நோக்குடன் வரும் இளைஞர்கள் தொழில் நுட்பத்தில் பின் நிற்க வேண்டாம். உங்கள் மெட்டுகள், இசை சிறப்பாக இருப்பினும், தொழில்நுட்பத்தில் தான் சறுக்கி விடுகிறோம். அதையும் சிறப்பாகக் கவனித்து, இசையை ஒன்றையொன்று குழப்பாத வகையில் அமைத்து, முடிந்தளவு குரல் பதிவில் அந்த பாடலுக்கான உணர்வுகள் வரும் வரையில்  முயற்சி செது பாருங்கள். கட்டாயம் அதில் உங்களுக்கு வெற்றி இருக்கும்.
இசைப் பயிற்சி அல்ல... இசை உணர்ச்சி...!

பில்லா2 சவுண்ட் இஞ்சினியர் கௌசிகன்

தென்னிந்தியத் திரைப்படங்களின் வெற்றிக்கும் அதன் பிரம்மாண்டத்திற்கும் கதை, களம், கதாபாத்திரங்கள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ அந்தளவு அப்படத்தின் சவுண்ட் சிஸ்டமும் முக்கியத்துவம் வகிக்கின்றது.
அவ்வாறு அஜித்தின்  பில்லா2 படத்தில் இசையால் அசத்தியவர் கௌசிகன். இவர் ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை.
இவரது அப்பா சிவலிங்கம் பலராலும் அறியப்பட்டவர். அதாவது ராஜ்சிவா என்று அழைக்கப்படும் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
இவ்வாரம் பேஸ்புக் பகுதியில் இணைகிறார் கௌசிகன் சிவலிங்கம்.
ஹாய் வணக்கம்! உங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 இசைத்துறையில் சிறுவயது முதல் ஆர்வமிருந்தாலும் என்னுடைய 5 ஆவது வயதில் அப்பா வாங்கிக் கொடுத்த கீபோர்டுதான் இசைத்துறைப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. அந்த கீபோர்ட்டில் ""முஸ்தபா... முஸ்தபா...'' என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை முதன் முதலாக  இசைத்துக் காட்டினேன். என்னுடைய இசை ஆர்வத்தை அறிந்து கொண்ட பெற்றோர் இசைப் பள்ளியில் முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்காக சேர்த்து விட்டார்கள். கீபோர்ட்டுடன் மிருதங்கமும் கற்றிருக்கிறேன். இவை இரண்டிலும் குறித்த அளவுக்குத் தேர்ச்சி பெற்ற நான், எனது 15 ஆவது வயதில் பாடல்களை இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். எனது மெட்டுகளுக்கு, அப்பா பாடல் வரிகளை எழுதித் தந்தார். அதுவே என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
ஐரோப்பிய வானொலிகளில் எனது பாடல்கள் வலம் வந்தன.  இதன் பயனாக சென்னை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சென்னை சென்றதும் சினிமாத்துறையில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. பல பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் எனப் பலரின் அறிமுகமும் கிடைத்தன. பாடல் ஆசிரியர் சினேகன் அவர்களின் வரிகளுக்கு எனது இசையமைப்பில் உருவான பாடலொன்று பாடகி சைந்தவி  பாட, “கலசா ஸ்ரூடியோசு இல் பதிவானது. அந்த நொடியில் எனக்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
எனது பாடல்கள் பதிவு செயப்பட்டுக் கொண்டிருக்கும் கலசா ஸ்ரூடியோவின் இன்னுமொரு தளத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது பாடல்களைப் பதிவு செதுகொண்டிருந்தார். அங்கு எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நிறையப் பேசினோம்.
என்னுடைய இசைப் பயிற்சியை முழுமையாக்குவதற்காக SAE  இல் (Society Of Automotive Engineers) கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் கல்லூரியில் சேர்ந்து ஓடியோ சவுண்ட் என்ஜினியரிங் பட்டப்படிப்பை ஆரம்பித்தேன்.
விடுமுறையில் இந்தியா சென்ற நான் அங்கு ஒரு இசை அல்பம் செயும் நோக்குடன் பாடகர்களை வைத்து பாடல்களைப் பதிவு செதேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மலேசியாவைச் சேர்ந்த ‘lady Kash & Krissy’ (எந்திரன் படத்தில் ""இரும்பிலே ஒரு இருதயம்''  என்ற பாடலைப் பாடியவர்கள்),  Where ever You Are, It’s Your Time  என இரண்டு ஆங்கிலப் பாடல்களை எனது இசையமைப்பிலும், இசைக்கோர்ப்பிலும் பாடினார்கள். அந்தப்பாடல்களை நீங்கள் யூடிப்பில் இந்த முகவரியுடாக பார்வையிடலாம். (.http://www.youtube.com/watch?v=cPA7LHybe20 ) ( http://www.youtube.com/watch?v=xXuykCIiNRw ).
அதன் பின்னர் நான் எனது படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினேன். 2011 இல், Audio Engineerig Diploma பட்டம் கிடைத்தது. 2011 ஏப்ரல் இந்தியா சென்றேன். யுவனுடன் 4 மாதங்களுக்கு மேல் பணியாற்றினேன். இந்த நேரத்தில் Apple Computer நிறுவனத்தில் பணிபுரிய என்னை அழைத்தார்கள். அங்கு வேலை செது கொண்டே இசைத்துறையிலும் ஈடுபட்டேன்.
மீண்டும் 2012 இல் எதிர்பாராத அழைப்பு ஒன்று யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து வந்தது. “ஒரு படம் பண்ணப்போறோம். அதில் நீ தான் பிரதான சவுண்ட்
எஞ்ஜினியர். உனக்குப் பிடித்த மிக பிரபலமான ஸ்ரூடியோவை நீயே புக் பண்ணு'' என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் வரவே இல்லை. கண்கள் கலங்கி விட்டன. சவுண்ட் எஞ்ஜினியராக என்னைத் தேடி யுவன் சங்கர் ராஜாவே ஐரோப்பா வருகிறேன் என்றவுடன் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்துடன் உடனே ஜேர்மனியில் மிகப்பிரபலமான ஸ்டூடியோ ஒன்றை புக் செதேன். ஸ்டூடியோவில் நான் அவரை சந்திக்கும்வரை என்ன படம் என்று தெரியாது. அவரும் சொல்லவில்லை. அவர் ஜேர்மனி வந்து இறங்கியவுடன் அது அஜித் அவர்களின் “பில்லா2'' படம் என்றார். எனது சந்தோசத் துக்கு அளவே இல்லை.
பில்லா2 படத்திற்காக கடுமையாக உழைத்து பாடல்களை பதிவு செது முடித்தோம். அந்தப்  படத்தின் பாடல்கள் முழுமையடைந்து வெற்றியையும் தேடித்தந்தன. அதன் பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில், அமீரின் இயக்கத்தில் உருவான ""ஆதிபகவன்'' படத்துக்கும் சவுண்ட் எஞ்சினியராகக் கடமையாற்றினேன். இன்னும் பல திரைப்படங்களுக்கு சவுண்ட் எஞ்சினியாரகக் கடமையாற்றவுள்ளேன்.
இளவயதிலேயே தென்னிந்தியத் திரைப்பட உலகில், முதல் இசைக்கோர்வையாளர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழர்களில் முதல் இசைக் கோப்பாளராகவும் தென்னிந்தியத் திரைத்துறையில் கடமையாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். எனது திறமையை அறிந்து என் விருப்பப்படி என்னை வழிநடத்திய எனது பெற்றோர்களே என் வெற்றிக்கு முதல் காரணம். அத்துடன், எனக்கு ஊக்கம் தந்து எல்லாவிதத்திலும் அக்கறை எடுத்த எனது சகோதரிக்கும் என் நன்றிகள். எப்போதும் உற்சாகப்படுத்தும் என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அதேபோல் நான் இன்னும் பண்ணப்போகும் பாடல்களுக்கும், நான் இசையமைக்கும் அல்பங்களுக்கும் ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவு என்றும் தேவை. வரும் காலத்தில் நான் தென்னிந்திய இசையமைப்பளராக வருவதற்கு என்னுடைய அப்பா, அம்மாவின் தா மண்ணின் மைந்தர்களாகிய உங்களின் ஆசியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!

அம்மா சொன்ன கடைசி வார்த்தை

சக்தி சுப்பர் ஸ்டார் சுதன் உதயசூரியனுக்கு அளித்த பேட்டி;

சக்தி தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி பல இதயங்களில் இடம்பிடித்தவர் சுதன்.

பல போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிகள் இவர் வசமாகியிருக்கின்றன. தமிழ், சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி முன்னேறிவரும் இலங்கையின் இளம் பாடகர் இவர்.
இவர் வெற்றி இலக்கைத் தொட்டது பற்றியும் தன் வாழ்க்கையின் கடந்து வந்த பாதை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தது யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலிருந்து படித்து வளர்ந்ததெல்லாம் திருகோணமலையில். அப்பா கிருஸ்ணராஜ், அம்மா வடிவழகி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் நான் கடைக் குட்டி.
 ஆரம்பம் முதல் உயர்தரம் வரை திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்தான் எனது பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிப்பருவத்தில் நான் பெரிய சாதனையாளன். காரணம் 32 மாணவர்களைக் கொண்ட எங்கள் வகுப்பறையில் நான்தான் 31 ஆம் நிலை. அவ்வளவு மக்கு, படிப்பதில் ஆர்வம் அற்றவனாக இருந்தாலும் பேச்சு, மெவல்லுநர் போட்டிகளில் மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன்.
எந்தவித இசைப் பின்னணியும் கொண்டிராதது எனது குடும்பம். இசையில் நாட்டம் வந்ததற்குக் காரணம் எனது அம்மாதான். அவர் சமைக்கும் பொழுது பாடும் மெல்லிய இசைப் பாடல்கள் அவரது சமையல் போலவே ருசியாக இருக்கும். என்னைப் பாட வைத்து அவர் ரசிப்பது மட்டுமல்லாது அயலவர்களையும் அழைத்து என்னைப் பாட வைத்து மகிழ்ச்சி அடைவார்.
 எனக்கும் என் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த எனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இசை கற்கச் சென்ற முதலாவது நாளே எனது சங்கீத ஆசிரியர் தந்த பரிசு இசைக்கற்பதற்கான ஆர்வத்தையே குறைத்தது. வழமையாக பாடசாலை முதல் தினத்தில் யாரும் பாடசாலைக்கு பெரிதாகச் செல்வதில்லை (அன்றைய தினம்தான் வகுப்பறை ஒழுங்கமைப்பு) அதன்வழி வந்த நானும் பாடசாலை போகவில்லை. இரண்டாம் நாள் சங்கீதப் பாடத்துக்கு முதன்முதலாக சென்றபோது முதலாவது நாள் ஏன் பாடசாலைக்கு வரவில்லையென்று என்னை கண்டித்ததை இன்னும் மறக்கமுடியாது. கைவசம் நிறைய மெட்டுக்கள் இருந்தும் பாடல் வரிகள் இருந்தும் பொருளாதாரம் பெரும் முட்டுக்கட்டையாவே இருந்தது. ஆரம்பத்தில் இசைத் தட்டு வெளியிடுவதற்காக நாங்கள் நாடியவர்களும் எங்ளை ஏமாற்றினார்களே தவிர, கைகொடுக்கவில்லை. எப்படியிருந்தாலும்
எனது கல்லூரியில் நடைபெற்ற தியானம் மற்றும் பஜனைப்பாடல்களில் எனது கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறு இருக்க, எனது பாடும் திறனைக்கண்ட ஒரு ஆசிரியர் எனது கல்லூரியில் வலயமட்ட வில்லுப்பாட்டுப்போட்டிக்கு அணித்தலைவராக என்னை நியமித்தார்.
எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்டநாள் பயிற்சியின் பின் எனது முதல் மேடையை சந்திக்கத் தயாராக இருந்தேன்.
அன்று எங்களுக்கு போட்டி. வில்லுப்பாட்டுக்கான உடையில் மேடையை நோக்கிச் சென்றபோது எமது கல்லூரியின் உப அதிபர் என்னை மட்டும் நிறுத்தி பாடப்போக வேண்டாம் என்றார், அருகில் எனது மாமா கண்கலங்கியபடி என்னைப் பார்த்தார். அப்பொழுதுதான் எனது அம்மா மரணப்படுக்கையில் இருப்பது தெரியவந்தது.
உடனே கொழும்பு பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். எனது அம்மாவின் நிலைகுறித்து நான் அழுதுகொண்டு சென்றேன்.
ஆனால், எனது அம்மா சிரித்தப்படி என்னை வரவேற்றார். அம்மாவிற்கு கடைசிப்பால் பருக்கச்சொன்னார்கள். அம்மா அதை குடித்தபின் என்னிடம் சொன்ன ஒரேயொரு வார்த்தை  தம்பி நல்லா படி. அம்மாவின் மரணத்தின் பின் அந்த வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றியது. நன்றாகப் படித்தேன். Oசஃ சித்தி எதினேன். உயர்தரத்தில் வர்த்தக பாடத்தைக் கற்று அம்மாவின் ஆசியோடும், அப்பாவின் உறுதுணையோடும் பல்கலைக்கழகம் தெரிவானேன். இதில் மறக்க முடியாத அனுபவம் என்னவென்றால் எனது வகுப்பாசிரியரிடம் (5ஆம் ஆண்டு தொடக்கம் 9 ஆம் ஆண்டு வரை)  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மற்றைய மாணவர்களுடன் நானும் சென்றேன். வந்த எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்தி விட்டு என்னைப் பார்த்து நீ எதற்காக வந்தா எனக் கேட்டார்.
 நானும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளேன் எனக் கூற  கண்கலங்கியவாறு என்னை கட்டியணைத்தார்.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. நான் பல்கலைக்கழகம் வந்து ஆறு மாதத்தில் எனது அப்பாவின் இழப்பையும் சந்தித்தேன். இறுதியாக அப்பாவைப் பார்த்தது, என்னை பல்கலைக்கழகத்திற்கு வழியனுப்பியபோது சிரித்தவாறு கைகளை அசைத்த அந்த நிமிடங்கள்தான் இன்னும் என் மனம்விட்டு நீங்காமல் இருக்கின்றது.
பின்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் குளியலறைப் பாடகன்தான். பின்பு எனக்கென ஒரு துணையை   தேடிக்கொண்டேன், நல்ல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் தூண்டுதலில் ரோட்டெரி கழகப் பாடல் போட்டிக்குச் சென்று இரண்டாம் இடம் பெற்றேன். பின்பு தேசிய இளைஞர் பேரவையினால்  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடல் போட்டியில் இரண்டாம் இடம், சக்தி சுப்பர் ஸ்டார் என எனது பாடல் பயணம் நீண்டது. மக்களின் ஆசியுடனும் நண்பர்களின் துணையுடனும் இறுதிப்போட்டிக்கு தெரிவானேன். இந்த வெற்றிக்கு எனது நண்பன் குணூடிண்ட ஈடிடூச் னுடைய உதவிக்கு நான் என்ன செதாலும் ஈடில்லை. இதன்போது எனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஊக்குவிப்பும் எனது இசைப் பயணத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது.
நிகழ்ச்சியில் நான் இறுதிச்சுற்றுவரை முன்னேறியதை கௌரவப்படுத்தும் வகையில் எனது நண்பர்கள் எனக்காக ஒரு வைபவத்தினை ஒழுங்கு செதிருந்தார்கள். எமது பல்கலைக்கழக வரலாற்றிலேயே தனியொரு மனிதனுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாவது வைபவம் அது என்பது எனக்கு பெருமிதம் தந்தது.
இதற்கு எனது சகோதர மொழி நண்பர்கள், கனிஷ்ட மாணவர்கள், வேறு பீட நண்பர்கள் வந்து என்னை வாழ்த்தி கௌரவப்படுத்தினர். எனது பல்கலைக்கழக உபவேந்தரும் வருகை தந்து கேடயம் தந்து என்னை கௌரவித்தார். இந்த உதவிகளுக்கு நான் என்ன கைமாறு செயப்போகிறேன் என்று தெரியவில்லை.
இறுதிவரை நன்றிமறவாத மனம் வேண்டும் இறைவனே. இதுவரை ஏழு இசைத்தட்டுப் பாடல்களைப் பாடியுள்ளேன். அதில் பாத்தியா, சந்தோஷின் பாடல் ஒன்றுக்கு என்னை சொல்லிசை (ரெப்) எழுதுமாறு பணித்தார்கள். அவர்கள் கொடுத்த மெட்டுக்கு பத்து நிமிடத்தில் சொல்லிசை எழுதினேன். இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நெஞ்சில் நீங்காதவை.
இதுபோன்றே சக்தியால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பாடல்கள் இசைத் தொகுப்பில் இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் மேற்பார்வைக்காக அழைக்கப்பட்டார். அதன்போதுதான் பாடல் பாடுவதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். நான் பயந்து பயந்து பாடிய அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
எங்களது அடுத்த இசைத்தொகுப்பு மகுடி புகழ் தினேஸ் கனகரட்ணத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிச்சயம் இந்த இசைத்தொகுப்பு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்னுடைய இசை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த எனது சகோதரர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எஸ்.ரோஷன்