செவ்வாய், 15 ஜனவரி, 2013

கிராமத்துப் பொங்கல் எப்படி இருக்கும்?

உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள் பொங்கல். உழவு கண்டு, விதைத்து, விளைச்சல் காணும் உழைப்பை உலகுக்கு  உணர்த்துவதுடன்,  உழைப்பில் விளைந்ததை உவகையோடு சமைத்தெடுத்து உறவுகளோடு பரிமாறிக் களிக்கும் ஒரு பண்பாட்டுத்  திருவிழாவாகவும் இந்நாள் இருக்கிறது. தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்த சோழநாட்டுத் தலைநகர் பூம்புகாரில் ஒரு காலத்தில் மழைக் கடவுள் இந்திரனுக்கென  28நாட்கள் Ôஇந்திரத்  திருவிழாÕ நடந்தது. இதுவே தமிழகத்தில் 4நாட்கள் நடக்கும் விழாவாகச் சுருங்கிப்போனதென்கின்றனர் ஆய்வாளர்கள்.  



பொங்கலுக்கு முதல்நாள் போகித் திருநாள். போகி என்றால் போக்கு என்றொரு பொருளுண்டு. தன் அத்தனை கெட்ட குணங்களையும் போக்கி விட்டு நலம்
சேர்த்துக் கொள்கிற நாளாகவே இந்நாள் போற்றப்படுகிறது. வடபுற மக்கள் வீட்டின் வீண் பொருட்களையெல்லாம் ரோட்டில் கொட்டி  நெருப்பிட்டுக் கொளுத்த, தென்புறத்து நம் கிராமத்து மக்கள் வீடு பெருக்கி, வெள்ளையடித்து தூசு துரத்துவதை போகியாக கடைபிடிக்கின்றனர். இந் நாளில்தான் புதுப்பெண் வீட்டார் மணமகன் வீட்டிற்கு தலைப்பொங்கல் சீர் அனுப்புகின்றனர். புத்தரிசியில் மட்டுமல்லாது, புதிய அடுப்பில் பொங்கலிடும் நோக்கில் பொங்கல் தினத்திற்கு முதல்நாளான இந்நாளில் கிராமங்களில் வீட்டு வாசல்களுக்கு எதிரில் புதுமண் குழைத்து அடுப்புகள் செய்வது  இன்றும் நடக்கிறது.

நல்ல மழை பெய்து நாடு செழித்திட விரதமிருந்து பொங்கல் தினத்தில் விரதம் முடிக்கிற பெண்கள் இன்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட கிரா மங்களில்
அதிகமிருக்கின்றனர். பொங்கல் நாளில் அதிகாலைக் குளியல், புத்தாடையுடன் வீட்டு முற்றத்துக் கோலம் அவசியம் இருக்கிறது. வாசல்களில் தோகை விரித்த செங்கரும்பு கள் கட்டப்படுகின்றன. தரிசுநிலங்களில் தானாக முளைக்கிற கூரைப்பூவுடன், ஆவாரம்பூ, மாவிலை சேர்த்துக் கட்டிய அலங்காரம் வீட்டிற்குள்  தேவைக்குரிய அனைத்து இடங்களிலும் நடக்கிறது. முற்றக் கோலத்தின் மீது தலைவாழை விரித்து நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை விழுந்து
வணங்கிய பிறகே பொங்கலிடும் வேலை துவங்குகிறது.

சூரியோதய கிழக்குத் திசை நோக்கி அடுப்பில் புதுப்பானை வைத்து, புத்தரிசியிட்டு  பொங்கலிடப்படுகிறது. பானையின் வாய்ப்புறத்தில் தூர்களுடன் கூடிய புது மஞ்சள் கிழங்கும், கூரை, ஆவாரப்பூக்கள், மாவிலையுடன் பருத்த பனங்கி ழங்குகளும் Ôகாப்பாகÕக் கட்டப்படுகிறது. புதுக்கரும்புகளையும் அருகில் நிறுத்தி வைக்கின்றனர். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைக்கின்றனர்.  பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட வலப்புறம் பொங்கி வழிந்தால் சிறப்பென்ற நம்பிக்கை இருக்கிறது. பொங்கலிட்ட பானையின் புதுமஞ்சள் கொத் தினை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவரது கைகளில் தந்து ஆசி பெற்று இளம்பெண்கள் அந்த மஞ்சளை கல்லில் தேய்த்தெடுத்து பாதத்தில்  தடவிக் கொள்ளும் பண்பாட்டினையும் கிராமப்புறங்களில் காண முடிகிறது.

பொங்கல்சோற்றினை வீட்டு தெய்வங்கள் பெயரில் படையலிட்டு முடிவாக  அத்தனைபேருக்கும் விநியோகம் நடக்கிறது. பொங்கல் தினத்து வீட்டு சைவ
உணவில் சிறு கிழங்குடன் வெண், சர்க்கரைப் பூசணிகள், பச்சை  மொச்சை, வாழைக்காய் என குறிப்பிட்ட காய்கறிகளே அதிகம் இடம் பிடிக்கிறது. தமிழில் செல்வமென்றால் ÔமாடுÕ பொருள் தருகிறது. உழவுக்கும், தொழிலுக்கும் கை கொடுத்து செல்வந்தனாய் உயர்த்துகிற கால்நடைகளுக்கு உழ வன் கிரீடம் சூட்டி மகிழ்கிற ஓர் உவகைத் திருநாளாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாள் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பட்ட கால்நடை களை கைகூப்பி வணங்கி மனிதன் மனதார நன்றி காட்டும் ஒரு மட்டற்ற நந்நாளிது.

மாடுகளைக் குளிப்பாட்டி, சலங்கைகள், வெண்கல மணிகள் இணைத்த கழுத்துப்பட்டியுடன், வண்ண நூல் கயிற்று மூக்கணாங்கயிறுகள் அணிகின்றனர். கொம்புகளைச் சீவி வண்ணம் பூசி அத்தனை மாடுகளும் அழகாகின்றன. அன்றைய தினத்திலும் வெண் பொங்கலிட்டு வழிபட்டு மாடுகளுக்கு பச்ச ரிசி, வெல்லம்,
வாழைப்பழத்துடன் பொங்கல் படைத்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்கின்றனர். மதுரை கிராமங்களில் மாட்டுப்பொங்கல் நாளில் எச்சித் தண்ணீர் தெளித்தல் என்றொரு நிகழ்வைத் தொடர்கின்றனர். பொங்கலோ பொங்கல்.. மாட்டுப்பொங்கல். பட்டி பெருக பால் பானை பொங்க நோவும்  பிணியும் தெருவோடு போக என்றபடி பொங்கலுண்டு மாடுகள் நீரருந்திய அந்த எச்சித் தண்ணீரை தொழுவத்தில் தெளிக்கின்றனர்.

இப்பொங்கல் நாளில் வீடுகளில் மாடுகள் வளர்க்காதோர் பூமாலைகள், பழங்கள் வாங்கிச் சென்று அருகாமை வீட்டு மாடுகளுக்கு அணிவித்து வழிபட்டு திரும்பும் வழக்கமும் இருக்கிறது. மாட்டுப்பொங்கல் தினத்தைப் பிரதானப்படுத்தியே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டுவென அடுத்தடுத்து தென்மாவட்ட  கிராமங்களில் வீர விளையாட்டுகளால் களை கட்டுகின்றன. இக்கொண்டாட்டத்தின் இறுதி நாளினை காணும் பொங்கல் நாள் என்றே அக்காலம் முதல் நம்மவர்கள் கொண்டாடி வந்துள்ளனர். தென்மாவட்ட  கிராமங்களில் ஆறு, குளக்கரையென நீர்த்தேக்கம் நிறைந்த சோலைகளில் பெண்கள் கூட்டாஞ்சோறு செய்து படைத்து வழிபாடு செய்வது நடக்கிறது.  எனவேதான் இதனை கன்னிப்பொங்கல் அல்லது கணுப்பொங்கல் என்றும் சொல்கின்றனர்.

ஏழைகளுக்கு தானம் தரும் ஓர் இனிய இரக்கத் திருநா ளாகவும் இந்நாள் போற்றப்பட்டிருக்கிறது. உறவுகள் ஒன்று கூடி மகிழ்ந்து களைகிற மட்டற்ற நாளாகவும் இந்நாள் மதிக்கப்பட்டு வருகிறது. இந்த  நாளில் இன்றும் சுற்றுலா இடங்களில், உறவினர் வீடுகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நாளில் மனித உறவுகள் பேசும் ஒற்றுமையே ஆண்டு  முழுக்க மன உணர்வுகளில் பலம் சேர்க்கிறது. இந்த நாலுநாள் கோலாகலம் உலகில் தமிழன் தவிர எவருக்கும் கிடைக்காத ஓர் அற்புதப் பரிசு. இந்நாட்களின் குதூகலிப்பு  ஆண்டு முழுக்க  நமக்குள் தங்கட்டும். ஆர்ப்பரிப்பில் உள்ளத்திற்குள் எப்போதும் உவகை பொங்கட்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக